விபத்து ஏற்பட்ட பள்ளத்தாக்கு
விபத்து ஏற்பட்ட பள்ளத்தாக்கு

ஜம்மு காஷ்மீரில் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 3 ராணுவ வீரர்கள் பலி!

கட்டுப்பாட்டை இழந்த ராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து விலகி 700 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.
Published on

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிகழ்வில், மூன்ற ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக இன்று (மே 4) காலை ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றுள்ளன. ராம்பன் மாவட்டத்தின் பாட்டரி சஷ்மா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ராணுவ வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து விலகி 700 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினர், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகியோருடன் கூட்டாக இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் இருந்த மூன்று ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அதன்பிறகு உயிரிழந்த மூன்று வீரர்களின் உடல்களும் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டன. காலை 11.30 அளவில் இந்த விபத்து நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார், மான் மகதூர் என்பது அடையாளம் காணப்பட்டது. மேலும், பள்ளத்தாக்கில் விழுந்ததால் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ராணுவ வாகனத்தின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதேபோல, கடந்த மார்ச் மாதத்தில் ரம்பான் மாவட்டத்தில் காய்கறிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

logo
Kizhakku News
kizhakkunews.in