பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: அமித்ஷா | Operation Mahadev

பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்சா ஆப்கானி ஆகிய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: அமித்ஷா | Operation Mahadev
ANI
1 min read

பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள டச்சிகாம் தேசியப் பூங்காவை ஒட்டி அமைந்திருக்கும் ஹர்வான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று (ஜூலை 28) காலை அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடுமையான முறையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. ஸபர்வான் மற்றும் மகாதேவ் முகடுகளுக்கு இடையே இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மகாதேவ் என்று பெயரிடப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்சா ஆப்கானி என்று அடையாளம் காணப்பட்ட இந்த பயங்கரவாதிகளும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் சரக காவல்துறை ஐஜி விதி குமார் பர்டி தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் நேற்று (ஜூலை 28) விவாதம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மக்களவையில் இன்று (ஜூலை 29) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது, `பைசரன் பள்ளத்தாக்கில் மதம் குறித்து விசாரிக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டனர்... (இந்த) தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை ராணுவம், சி.ஆர்.பி.எஃப். மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கூட்டு முயற்சியில் சுட்டு வீழ்த்தியுள்ளனர்’ என்றார்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக, கடந்த மாதம் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர் உயர்மட்ட தளபதி சுலைமான் ஷா, ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் என்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரும் அடையாளம் கண்டு உறுதி செய்ததாகவும் அமித் ஷா கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in