
குஜராத்தின் போர்பந்தரில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று (ஜன.5) பிற்பகலில், குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமானநிலையத்தில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ALH துருவ் ரக ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முற்பட்டது. அப்போது எதிர்பாராவிதமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விபத்துச் சம்பவம் நண்பகல் 12.10 மணியளவில் நடந்ததாகப் போர்பந்தர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா தகவல் தெரிவித்தார். இந்த விபத்துக்குப் பிறகு ஹெலிகாப்டருக்குள் இருந்த மூன்று நபர்களும் வெளியே கொண்டு வரப்பட்டு, பலத்த தீக்காயங்களுடன் அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவித்தார் போர்பந்தரில் உள்ள கமலா பாக் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கன்மியா. இதனைத் தொடர்ந்து 3 பேரின் உயிரிழப்பை கடலோரக் காவல் படை உறுதி செய்தது, மேலும் இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், இதேபோல துருவ் ரக ஹெலிகாப்டர் போர்பந்தருக்கு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 16 ALH துரூவ் ரக ஹெலிகாப்டர்கள் கடலோர காவல் படை வசம் உள்ளன.