
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின்போது குண்டிச்சா கோயில் அருகே ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஒடிஷா மாநிலம் புரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. ரதங்கள் ஜெகந்நாத் கோயிலிலிருந்து நேற்று சாரதா பாலியை சென்றடைந்தது.
குண்டிச்சா கோயில் அருகே அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி இடையில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயில் ரதங்களைக் காண வார இறுதி நாளைக் கணக்கிட்டு ஏராளமான பக்தர்கள் அங்கு கூடினார்கள்.
ஒடிஷா சட்டத் துறை அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"இது துரதிருஷ்டவசமான சம்பவம். முதல்வரிடம் இன்று காலை பேசினேன். கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காவல் துறை இயக்குநர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். மக்கள் அதிகளவில் கூடியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். 6 முதல் 7 பேர் காயமடைந்துள்ளார்கள். நான் புரிக்குச் செல்கிறேன். தொலைபேசி வாயிலாக நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது" என்றார் அவர்.
உயிரிழந்தவர்கள் பிரேமகந்தா மோஹன்டி (80), பசன்டி சாஹு (36) மற்றும் பிரபதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய சுவாமிகள் மூன்று வெவ்வேறு ரதங்களில் வைக்கப்பட்டு, ரத யாத்திரை மேற்கொள்ளப்படும். புனித ரதங்கள் குண்டிச்சா கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மூன்று சுவாமிகளும் அங்கு ஒரு வார காலம் செலவழித்தபிறகு, மீண்டும் ஜெகந்நாதர் கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும்.