
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அம்மாநிலத்தின் 19 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையை அடுத்து அஸ்ஸாமின் புரம்மபுத்திரா, பராக் ஆகிய நதிகள் மற்றும் அதன் கிளை நதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாக வரும் நீர்வரத்தாலும், அஸ்ஸாமில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் 19 மாவட்டங்களில் சுமார் 3.64 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிலும், மிகக் கடுமையான பாதிப்பை கச்சார் மாவட்டம் சந்தித்துள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1.03 லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமின் ஹைலகண்டி மற்றும் ஸ்ரீபூமி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் இன்று (ஜூன் 2) விடுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மட்டுமல்லாமல், அதன் அண்டை வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரிலும், திரிபுராவிலும்கூட வெள்ள பாதிப்பு நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. திரிபுராவின் 2 மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை பாதிப்பு நிலவரம் குறித்து அஸ்ஸாம், சிக்கிம், அருணாசலப் பிரதேச முதல்வர்கள் மற்றும் மணிப்பூர் ஆளுநர் ஆகியோரிடம் கேட்டறிந்தாகவும், சாத்தியமுள்ள அனைத்துவிதமான உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.