

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செயல்படுவதாக நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மொத்தம் 272 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது போலி வாக்குகள், வாக்குத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார். இதுவரை கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். மேலும், இந்த மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்குத் தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில்களைத் தேர்தல் ஆணையமும் கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் வகையில் ராகுல் காந்தி செயல்படுகிறார் என்று நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோர் உட்பட 272 பேர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் 16 நீதிபதிகள், 123 ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், 14 தூதரக அதிகாரிகள் மற்றும் 133 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
”மூத்த குடிமக்களான நாங்கள், நமது நாட்டின் ஜனநாயகம் விஷமத்தனமான சொல்லாட்சிகளின் எழுச்சியால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் கவலையுடன் தெரிவிக்கிறோம். அரசியல் தலைவர்கள் சிலர் உண்மையான மாற்றுக் கொள்கைகளை வழங்குவதற்குப் பதிலாக தங்கள் நாடக அரசியல் உத்திகளின் மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்திய ராணுவப் படைகளின் பெருமையையும் செயல்பாடுகளையும், நீதித்துறையின் பொதுத்தன்மையையும், நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பின் நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாக்கிதற்குப் பின் தற்போதுதேர்தல் ஆணையத்தின் மீது திட்டமிடப்பட்ட சர்ச்சைக்குரிய தாக்குதல்களை நடத்தி, அதன் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறார்.
நாட்டின் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இதனடிப்படையில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையைக் கடைபிடித்து, அனைத்து விதமான தகவல்களையும் வெளியிட்டு, குற்றச்சாட்டுகள் குறித்த நியாயாமான விளக்கங்களைக் கொடுத்து, இவற்றை சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்தாகக் கூறி அரசியல் செய்யும் தலைவர்களைக் கண்டுகொள்ளக் கூடாது. அதே நேரத்தில் அரசியலமைப்பின் அடிப்படையில் நிகழும் செயற்பாடுகள் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என்று அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
272 eminent citizens write an open letter condemning the LoP and the Congress Party’s attempts to tarnish constitutional bodies like the Election Commission of India.