22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன: எஸ்பிஐ

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் மூலம் சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்.
22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன: எஸ்பிஐ

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துவிட்டோம் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் முறை சட்டவிரோதமானது என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி 15-ல் தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்படி எஸ்பிஐ-க்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் தேவை என எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் இதை நிராகரித்தது. செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, தேர்தல் பத்திரங்கள் தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் நேற்று மாலை சமர்ப்பித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், எஸ்பிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரமாணப் பத்திரத்தில் எஸ்பிஐ சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அதன் தொகை விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம். தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற தேதி, நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் தொடர்புடைய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 14, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள், பணமாக்கப்பட்ட பத்திரங்கள் தொடர்புடைய தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். இந்த காலகட்டத்தில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1, 2019 முதல் ஏப்ரல் 11, 2019 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 1,609 பத்திரங்கள் மட்டுமே இதே காலகட்டத்தில் பணமாக்கப்பட்டன.

ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் 20,421 பத்திரங்கள் பணமாக்கப்பட்டன.

மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய தரவுகளை பிடிஎஃப் வடிவில் தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவில் சமர்ப்பித்துள்ளோம். இதற்கான கடவுச் சொற்களைத் தனியாக சமர்ப்பித்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in