ஒரு வாரத்தில் 20-வது விமான வெடிகுண்டு மிரட்டல்: நடந்தது என்ன?

திங்கள்கிழமை 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை 10, புதன்கிழமை 6 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஒரு வாரத்தில் 20-வது விமான வெடிகுண்டு மிரட்டல்: நடந்தது என்ன?
1 min read

ஃபிராங்ஃபூர்ட்டிலிருந்து மும்பை வந்துகொண்டிருந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலைத் தொடர்ந்து, விமானத்தை அவசரமாகத் தரையிறக்க வேண்டும் என மும்பை விமான நிலையத்துக்கு விமானி எச்சரிக்கை விடுத்தார்.

யுகே 28 விமானமானது, பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, காலை 6 மணியளவில் அவசர தரையிறக்கம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்பிறகு, காலை 7.40 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

நடப்பு வாரத்தில் விமானத்துக்கு விடுக்கப்படும் 20-வது வெடிகுண்டு மிரட்டல் இது. திங்கள்கிழமை 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதன்கிழமை 6 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த மிரட்டல்கள் அனைத்தும் சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டன. விசாரணையில் மிரட்டல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது கண்டறியப்பட்டது.

சமூக ஊடகம் வாயிலாகவே விஸ்தாராவின் யுகே 028 விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தனி இடத்தில் விமானம் நிறுத்தப்பட, அங்கிருந்து அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள். பாதுகாப்பு அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, விமானங்களுக்கு விடுக்கப்படும் தொடர் மிரட்டல்களைத் தொடர்ந்து பயணிகள் விமானங்களுக்கான ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

"உளவுத் துறை அளிக்கும் அறிக்கைக்கு ஏற்ப அச்சுறுத்தல் இருக்கக்கூடிய சர்வதேச விமான மார்க்கங்களில் புதிதாக ஏர் மார்ஷல்கள் பணியமர்த்தப்படவுள்ளார்கள். விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருடனும் பல்வேறு கட்டங்களில் ஆலோசனைகள் நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஏர் மார்ஷல் என்றால் யார்?

தேசிய பாதுகாப்புப் படையில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விமான கடத்தல் தடுப்பில் வல்லுநர்களாக உள்ளவர்கள் ஏர் மார்ஷல்களாக நியமிக்கப்படுவார்கள். பெரும்பாலும் சர்வதேச விமான மார்க்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகம் இருக்ககூடிய சில உள்நாட்டு மார்க்கங்களில் உள்ள பயணிகள் விமானத்தில் ஏர் மார்ஷல்கள் பயணிப்பார்கள். சாதாரண உடையுடன் ஆயுதங்களைக் கொண்ட பாதுகாவலர்களாகப் பயணம் மேற்கொள்வார்கள்.

இந்த நடைமுறையானது இந்தியாவில் 1999-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 1999-ல் காந்தஹாரில் ஏர் இந்தியா ஐசி 814 விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆயுதங்களைக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் ஏர் மார்ஷல்கள், சூழலுக்கேற்ப விமானம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக செயலில் இறங்குவார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in