
நேற்று (அக்.11) இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த பாக்மதி விரைவு ரயில், ஏற்கனவே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
விபத்துப் பகுதியில் இருக்கும் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, ரயில் வழித்தடத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள்
கடந்த ஜனவரி 10-ல் ஹைதராபாதின் நாம்பள்ளி ரயில் நிலையத்துக்கு அருகே, சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சார்மினார் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர்
பிப்ரவரி 17-ல் தில்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டன.
மார்ச் 5-ல் தெலங்கானா மாநிலம் காஸிபெட் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணியர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஜூன் 17-ல் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலீங் மாவட்டத்தில், கஞ்ஜன்ஜங்கா விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரயில் ஓட்டுனர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜூலை 18-ல் உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில், திப்ருகர்–சண்டிகர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜூலை 30-ல் ஹவுரா-மும்பை விரைவு ரயில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்துக்கு அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று (அக்.11) கவரைப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே நடந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (அக்.12) வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
`ஒவ்வொரு ரயில் விபத்துக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் கூட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. பழைய தொழில்நுட்பங்களை மாற்றி புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் நோக்கில் ரயில்வே துறை நிறைய திட்டங்களைக் கொண்டுவருகிறது.
ஒவ்வொரு விபத்தும் ஒரே மாதிரியான காரணங்களால் நடைபெறுவது கிடையாது. பாஜக ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் ரயில் விபத்துகள் எவ்வளவு நடைபெற்றது என்பதை விவாதிக்கலாம். நம்மிடம் அதற்கான தரவுகள் உள்ளன. ஆனால் ரயில்வே துறையில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் இங்கிருந்து வந்தே பாரத் ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
ரயில்வே துறை அதிகமான அளவில் முதலீடுகள் தேவைப்படும் ஒரு துறை. ஆனாலும் எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை வழங்கிக்கொண்டிருக்கிறது. ரயில் விபத்துகளை மத்திய அரசு எச்சரிக்கையாகக் கையாளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சில நேரங்களில் மனிதத்தவறுகள் நடக்கின்றபோது யார் காரணம் என்பதைப் பார்த்துவிட்டே கருத்து கூறுவது சரியாக இருக்கும்’ என்றார்.