அதிகரித்த பதற்றம்: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள்!

இம்பால் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் மாவட்டங்களில் நவ.18 முதல் அக்டோபர் 1 வரை துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு, கலவரம் போன்ற 16 வன்முறை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
அதிகரித்த பதற்றம்: மணிப்பூருக்கு விரைந்த 20 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள்!
1 min read

மணிப்பூரில் மீண்டும் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக நேற்று (நவ.22) மட்டும் கூடுதலாக 20 கம்பெனி துணை ராணுவப்படையை அம்மாநிலத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸைரௌன் கிராமத்தில், ஹமர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கடந்த நவம்பர் 7-ல், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் நவம்பர் 7 முதல் 18 வரை ஜிரிபம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் மாவட்டங்களில் நவ.18 முதல் அக்டோபர் 1 வரை துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு, கலவரம் போன்ற 16 வன்முறை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்டப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை தில்லியில் நடத்தினார். இதை அடுத்து, கடந்த 10 நாட்களில் மட்டும் 90 கம்பெனி துணை ராணுவப்படை மணிப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று (நவ.22) மட்டும் 20 கம்பெனி துணை ராணுவப்படை மணிப்பூருக்குச் சென்றுள்ளது.

மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மணிப்பூர் அரசு நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டம் குறித்து பேட்டியளித்த மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்திப் சிங்,

`பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ராணுவம், காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லையோர பாதுகாப்புப் படை, இந்தியா திபெத் எல்லையோர காவல் படை ஆகியவற்றின் அதிகாரிகள் உடனிருந்தனர். எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதை நாங்கள் ஒருங்கிணைந்து சந்திப்போம்’ என்றார்.

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்துவரும் மெய்தி இன மக்களுக்கும், அருகில் உள்ள மலைப் பகுதிகளில் வசித்துவரும் குக்கி-ஸோ பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த 2023 மே 3-ல் கலவரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் அம்மாநிலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in