
தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் குறைந்தபட்சம் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மஹா கும்பமேளாவுக்குச் செல்வதற்காக ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியிருக்கிறார்கள். ரயில்கள் தாமதமானதால், கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
கூட்டநெரிசல் தொடர்பாக ரயில்வே காவல் துறை துணை ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"நடைமேடை 14-ல் பிரயாக்ராஜ் விரைவு ரயில் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. இதனால், இந்த நடைமேடையில் ஏற்கெனவே கூட்டம் அதிகமாக இருந்தது. கூடுதலாக, ஸ்வதந்த்ரா செனானி விரைவு மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானது. இதனால், நடைமேடை 12, 13 மற்றும் 14-ல் பயணிகளின் எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரித்தது. இதுவே நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது.
ஒவ்வொரு மணி நேரமும் 1,500 முன்பதிவில்லாத பயணச்சீட்டுகள் ரயில்வே தரப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்தில் அதிக கூட்டம் சேர்ந்து, கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16 அருகே கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியானதும், அதில் ஏற பயணிகள் முந்தியடிக்க முயற்சித்ததால், 15-20 நிமிடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது" என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.