
ஹைதராபாதில் சார்மினார் அருகே கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஹைதராபாதில் புகழ்பெற்ற சார்மினார் அருகே குல்சார் ஹவுஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு வணிகப் பயன்பாடு மற்றும் குடியிருப்புக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
விபத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள். இவர்கள் டிஆர்டிஓ மருத்துவமனை, ஒஸ்மானியா பொது மருத்துவமனை மற்றும் தனியார் சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் சார்மினார் சட்டப்பேரவை உறுப்பினர் மீர் ஸுல்ஃபிகர் அலி உள்ளார். தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் உள்ளார். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளார்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது:
"முத்து விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கடையின் உரிமையாளர்கள் கடைக்கு மேலே முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்கள். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் காயமடைந்திருக்கிறார்கள். பிரதமரிடம் பேசிய பிறகு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுத் தருவேன்" என்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.