
ஒடிஷா, சத்தீஸ்கர் காவல்துறையினர் நடத்திய கூட்டு தாக்குதலில் சுமார் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
முன்னதாக சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களின் எல்லைப்பகுதியை ஒட்டிய மெயின்பூர் காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சத்தீஸ்கர், ஒடிசா எல்லையில் அமைந்துள்ள மெயின்பூர் காட்டுப் பகுதியில் நேற்று முந்தைய தினம் (ஜன.19) இரு மாநில காவல்துறையினர், மாவட்ட ரிசர்வ் காவல் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, கோப்ரா சிறப்புப் படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினார்கள்.
இதனை அடுத்து நேற்றும் இன்றும் (ஜன.21), தொடர்ந்து இரு நாட்களாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 16 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, முக்கிய நக்சல் கமாண்டரான ஜெய்ராம் என்கிற சலபதி இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலின்போது நக்சல்கள் வசம் இருந்த ஏராளமான ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று மெயின்பூர் காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நடப்பு ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 45 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு தினங்களுக்கு முன்பு சத்தீஸ்கரில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கும் முன்பு கடந்த ஜன.17-ல் சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.