கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தில்லி விமான நிலையத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்!

தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தைச் சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது தில்லி காவல்துறை
Published on

தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும், லேசர் ஒளி உபயோகிக்கவும் தடை விதித்துள்ளது தில்லி காவல்துறை

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகி அடுத்த சில நாட்களில் புதிய அரசு பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள பல முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் தலைநகர் தில்லிக்குப் பறக்கும் காரணத்தால், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவை விதித்துச் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது தில்லி காவல்துறை.

கடந்த சில வருடங்களாக தில்லி விமானநிலையத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்றவை அதிகரித்துவிட்டன. இரவு நேரத்தில் அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் லேசர் ஒளி பயன்படுத்துவதால், தில்லி விமானநிலையத்துக்குள் விமானத்தைத் தரையிறக்குவதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர் விமானிகள். இதனால் விமானப் பயணிகளின் உயிருக்கான பாதுகாப்பு கேள்விக்குரியாகி உள்ளது.

இரவு நேரங்களில் லேசர் ஒளி பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த தற்போது எந்த சட்டமும் அமலில் இல்லாத்தால், லேசர் ஒளி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

மேலும் தானியங்கி மற்றும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய அரசுக்கு நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்துள்ளதால் விமானநிலையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடைவிதித்துள்ளது தில்லி காவல்துறை.

காவல்துறையின் இந்தத் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kizhakku News
kizhakkunews.in