குஜராத்தில் வேகமாகப் பரவும் மர்மக்காய்ச்சல்: 5 நாட்களில் 14 நபர்கள் மரணம்

இந்த மரணங்கள் அனைத்தும் `ஜாட் மல்தாரி’ என்று அழைக்கப்படும் ஒட்டகங்களை மேய்க்கும் சமூகத்தில் நடந்துள்ளன
குஜராத்தில் வேகமாகப் பரவும் மர்மக்காய்ச்சல்: 5 நாட்களில் 14 நபர்கள் மரணம்
PRINT-131
1 min read

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பரவி வரும் மர்மக்காய்ச்சலால் கடந்த 5 நாட்களில் மட்டும் 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து நிலைமையைக் கட்டுக்கொள் கொண்டு வர 27 மருத்துவக்குழுக்கள் கட்ச் மாவட்டத்துக்கு விரைந்துள்ளன.

கடந்த வாரம் தொடங்கி கட்ச் மாவட்டத்தின் லக்பட் தாலுகாவில் இதுவரை மொத்தம் 14 நபர்கள் மர்மக்காய்ச்சலால் மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்களுக்கு எச்1என்1, டெங்கு, மலேரியா, கோவிட், கிரீமியன்-காங்கோ உள்ளிட்ட நோய்கள் காரணம் அல்ல என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

5 முதல் 50 வயது வரையிலான நபர்கள் மரணமடைந்துள்ளனர். நோயாளிகளுக்குத் தொடக்கத்தில் காய்ச்சல், இருமல் போன்றவை இருந்துள்ளன. பிறகு சுவாசக்கோளாறும், இறுதியில் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டும் அவர்கள் அனைவரும் மரணமடைந்துள்ளனர்.

இந்த லக்பட் தாலுகாவானது கட்ச் மாவட்டத்தில் இருக்கும் பாலைவனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், இதற்கான காரணத்தைக் கண்டறியவும் 27 மருத்துவக்குழுக்களை லக்பட் மாவட்டத்துக்கு அனுப்பியுள்ளது குஜராஜ் மாநில அரசு.

இந்த உயிரிழப்புகள் அனைத்தும் `ஜாட் மல்தாரி’ என்று அழைக்கப்படும் ஒட்டகங்களை மேய்க்கும் சமூகத்தில் நடந்துள்ளதால், ஒட்டகங்களிலிருந்து பொதுமக்களுக்கு நோய் பரவியுள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில் கால்நடைத்துறை அதிகாரிகளையும் லக்பட் தாலுக்காவுக்கு அனுப்பியுள்ளது குஜராத் அரசு. மேலும் அந்தப் பகுதியில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in