
தில்லி மாநகராட்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாக, ஆம் ஆத்மி கட்சியின் 13 கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அத்துடன் இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சி என்கிற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
13 கவுன்சிலர்களின் இந்த முடிவால், தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களின் எண்ணிக்கை 113-ல் இருந்து 100 ஆகக் குறைந்துள்ளது. மாநகராட்சியில், பாஜகவுக்கு 117 கவுன்சிலர்களும், காங்கிரஸுக்கு 8 கவுன்சிலர்களும் உள்ளனர்.
மோரல்பண்ட் கவுன்சிலர் ஹேமன்சந்த் கோயல் தலைமையிலான இந்த 13 கவுன்சிலர்களும், மாநகராட்சியில் தனி குழுவாக செயல்பட உள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைமை மற்றும் ஒருங்கிணைப்பு மீதான ஏமாற்றமே தாங்கள் வெளியேறுவதற்கான முக்கிய காரணங்கள் என்று கவுன்சிலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத் தலைவரான முகேஷ் கோயலும் இந்த 13 பேரில் ஒருவர். இது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தில்லி மாநகராட்சி முன்பு காங்கிரஸ் வசம் இருந்தபோது, முக்கிய நபராக வலம் வந்த கோயல், 2022 உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
அதன்பிறகு அக்கட்சி சார்பில் கவுன்சிலராகத் தேர்வான கோயல், தில்லி மாநகராட்சியின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கோயல், அண்மையில் நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதர்ஷ் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவை ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது. மேயர் தேர்தலுக்குப் பிறகு தங்கள் கவுன்சிலர்களை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருவதாகவும், ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைக்குழு மற்றும் வார்டு குழுக்களை அமைக்க பாஜகவிடம் பெரும்பான்மை இல்லை என்பதால் தங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.