வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு: ஏப்ரல் 18-க்கு ஒத்திவைப்பு!

"வாக்குச் சீட்டு முறையில் என்ன நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், நாங்கள் மறக்கவில்லை."
வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கு: ஏப்ரல் 18-க்கு ஒத்திவைப்பு!

வாக்கு ஒப்புகைச் சீட்டை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வாக்கு ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபன்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.

அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே செல்லலாம். மற்றொரு அம்சமாக வாக்கு ஒப்புகைச் சீட்டை வாக்காளர்களிடம் கொடுக்கலாம். அல்லது, வாக்கு ஒப்புகைச் சீட்டு ஒரு இயந்திரத்தில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்து, அந்த ரசீதைப் பிறகு வாக்காளரிடம் கொடுக்கலாம். அதை அவர்கள் வாக்குப் பெட்டியில் செலுத்தலாம்" என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், "வாக்குச் சீட்டு முறையில் என்ன நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், நாங்கள் மறக்கவில்லை. வாக்கு இயந்திரத்தில் கோளாறு உள்ளதா இல்லையா என்பதைத் தரவுகளைக் கொண்டுதான் அணுக முடியும்" என்றார்.

வழக்கின் மீதான வாதங்கள் இன்னும் நிறைவடையவில்லை. அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in