
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் டெம்போ டிராவலர் ஆழ்ந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள், 14 பேர் காயமடைந்துள்ளார்கள்.
விபத்து நேரிட்டதை அறிந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். விபத்தில் காயமடைந்தவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
விபத்து குறித்து கார்வால் ஐ.ஜி. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"நொய்டாவிலிருந்து புறப்பட்ட டெம்போ டிராவலர் ருத்ரபிரயாக் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 150 மீட்டர் ஆழ்ந்த பள்ளத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்துள்ளது. இதில் பயணித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் சரி வர தெரியவில்லை. இதுவரை 8 உடல்களை மீட்டுள்ளோம். 9 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன்தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியும்" என்றார்.
சமீபத்திய செய்திகளின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.