தனியார் நிறுவனங்களில் இனி 10 மணி நேர வேலை?: மஹாராஷ்டிர அரசு புதிய திட்டம்! | Maharashtra

பெண் ஊழியர்களை இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிப்பது மாநில அரசின் பரிசீலனையில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க முன்மொழிவாகும்.
மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை
மஹாராஷ்டிர மாநில அமைச்சரவைANI
1 min read

தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை நேரத்தை மாற்றக்கூடிய ஒரு திட்டத்தை மஹாராஷ்டிர மாநில அரசு ஆராய்ந்து வருகிறது. அதிகபட்ச தினசரி வேலை நேரத்தை ஒன்பது மணி நேரத்தில் இருந்து பத்து மணி நேரமாக நீட்டிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ஆகாஷ் ஃபண்ட்கர் கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது மாநில தொழிலாளர் துறையால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு இது குறித்து உரிய ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் ஃபண்ட்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகள் ஒழுங்குமுறை) சட்டம், 2017-ல் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடைகள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் வணிகங்களுக்கான வேலை நேரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளை தற்போது இந்த சட்டம் தற்போது வரையறுக்கிறது.

இதன் மூலம் மாநில தொழிலாளர் விதிமுறைகளை சர்வதேச நடைமுறைகளுக்குத் தோதாக மாற்றும் அதே வேளையில், பணியிடங்களுக்கான நெகிழ்வுத்தன்மையையும் இது கொண்டு வரும் என்று மாநில அரசு நம்புகிறது.

மூன்று மாத காலத்திற்குள், அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணி நேரத்தை தற்போதைய 125 மணிநேரத்தில் இருந்து 144 மணிநேரமாக அதிகரிப்பது குறித்து மாநில அரசால் ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க கட்டாய இடைவேளைகளை அறிமுகப்படுத்துவது உள்பட தொடர்ச்சியான பணி நேரத்திற்கான விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திட்டத்தையும் இந்த முன்மொழிவு வலியுறுத்துகிறது.

பெண் ஊழியர்களை இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிப்பது மாநில அரசின் பரிசீலனையில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க முன்மொழிவாகும், இது வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று மாநில அதிகாரிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in