
உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது மஹாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரிக்கு உட்பட்ட மருத்துவமனையில் `பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு பராமரிப்புப் பிரிவு’ (special newborn care unit) செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் நேற்று (நவ.15) இரவு 10.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.
உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனை அடுத்து, இந்தத் தீ விபத்தில் காயமுற்றும், மூச்சுத்திணறியும் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து தெரிய வந்தது.
மேலும், தீ விபத்தில் சிக்கிக் காயமடைந்த சில குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விரிவான விசாரணைக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார் யோகி ஆதித்யநாத். அதேபோல விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் ரூ. 2 லட்சமும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
குழந்தைகள் பலியான நிகழ்வுக்கு தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இரங்கல் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, `மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் பல குழந்தைகள் இறந்துபோன செய்தி வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை கடவுள் வழங்கட்டும். காயமுற்ற குழந்தைகள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்’ என்றார்.