ரோஹித் வெமுலா குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுத் தருவோம்: கே.சி. வேணுகோபால்

"முன்பு நடத்தப்பட்ட விசாரணையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன."
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரோஹித் வெமுலா குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுத் தர தேவையான அனைத்தையும் தெலங்கானா காங்கிரஸ் அரசு செய்து கொடுக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா வழக்கை முடித்து வைத்ததாக தெலங்கானா காவல் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. காவல் துறையின் இறுதி அறிக்கையில், ரோஹித் வெமுலா தலித் வகுப்பைச் சாராதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ரோஹித் வெமுலாவின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று தெலங்கானா டிஜிபி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்த ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, இந்த அரசு (காங்கிரஸ் அரசு) எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

ரோஹித் வெமுலா வழக்கு குறித்து கே.சி. வேணுகோபால் கூறியதாவது:

"ரோஹித் வெமுலாவின் மரணம் மிகப் பெரிய கொடுமை. பாஜகவின் தலித் விரோத மனநிலையை இது காட்டுகிறது.

கடினமான காலங்களில் ரோஹித் வெமுலாவின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் துணை நின்றது. தெலங்கானா காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதைப்போல வழக்கை முடித்து வைத்ததற்கான அறிக்கை ஜூன் 2023-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பு நடத்தப்பட்ட விசாரணையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. ரோஹித் குடும்பத்துக்கான நீதியைப் பெற்றுத் தர தேவையான அனைத்தையும் தெலங்கானா காங்கிரஸ் அரசு செய்து கொடுக்கும்.

மத்தியில் நாங்கள் ஆட்சியமைத்தால், கல்லூரி வளாகங்களில் நிகழும் சாதிய, வகுப்புவாத பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்றுவோம். சமூகப் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் வகுப்பிலிருந்து வரும் எந்தவொரு மாணவரும் ரோஹித் வெமுலாவைப்போல பாதிப்படையக் கூடாது" என்று கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in