நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறிப்படாவிட்டால் மறுதேர்வு: உச்ச நீதிமன்றம்

நீட் வினாத்தாளை யார் தயாரிப்பது? எவ்வாறு வினாத்தாள்கள் அச்சிடப்படுகிறது? அச்சிட்டப்பட்ட பிறகு எவ்வாறு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது?
நீட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டறிப்படாவிட்டால் மறுதேர்வு: உச்ச நீதிமன்றம்

கடந்த மே மாதம் நடந்த நீட் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்த காரணத்தால், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த விவகாரத்தில் பல கேள்விகளையும், தன் அதிருப்தியையும் எழுப்பினார்.

நீட் தேர்வு வினாத்தாள்களை யார் தயாரிப்பது? எவ்வாறு வினாத்தாள்கள் அச்சிடப்படுகிறது? அச்சிட்டப்பட்ட பிறகு எவ்வாறு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது? போன்ற தகவல்களை சமர்ப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார் தலைமை நீதிபதி சந்திரசூட்

பிறகு `நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா’ என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டார். அதற்கு, `ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. அது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று பதிலளித்தார் தேசிய தேர்வு முகமை அமைப்பின் வழக்கறிஞர்.

அப்போது `நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று. வினாத்தாள் கசிந்த பிறகு நிச்சயமாக அது வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளில் காட்டுத்தீ போலப் பரவியிருக்கும். இந்த முறைகேடால் குறைவான நபர்கள் பலனடைந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இந்த முறைகேட்டில் அதிக நபர்கள் பலனடைந்ததற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்றார் சந்திரசூட்.

`இரண்டு, மூன்று மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டுமா?’ என்று கேள்வியெழுப்பிய சந்திரசூட், `இது (நீட்) 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விஷயம் என்பதால் இந்த விவகாரம் குறித்து விளக்கமாக விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கண்டறிப்பட வேண்டும். அப்படி கண்டறிப்படாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடப்படும்’ என்றார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு புதன்கிழமை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ, தேசிய தேர்வு முகமை அமைப்புகளுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். மேலும் நீட் தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க ஒழுங்கு நடைமுறைக் குழுக்களை அமைக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம்.

பிறகு இந்த வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in