
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதத்துக்குப் பதிலாக செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்குச் செல்லவிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி வரும் ஆகஸ்டில் வங்கதேசத்துக்குப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவிருந்தது. கடந்த ஏப்ரலில் இதற்கான அட்டவணையை வங்கதேசம் வெளியிட்டது. இதன்படி ஆகஸ்ட் 17, ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 23-ல் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன. டி20 ஆட்டங்கள் ஆகஸ்ட் 26, ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 31 நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தன. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் மிர்பூர் மற்றும் சாட்டோகிராமில் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தொடர்கள் தற்போது ஆகஸ்ட் மாதத்துக்குப் பதிலாக செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான புதிய அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த வங்கதச கிரிக்கெட் சங்கத் தலைவர் அமினுல் இஸ்லாம் கூறுகையில், இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் வரவிருப்பதை பிசிசிஐ இன்னும் உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார். அரசிடமிருந்து சில முடிவுகளைப் பெற வேண்டியிருப்பதால் பிசிசிஐ உறுதி செய்யவில்லை எனக் கூறப்பட்டது.
இந்தப் பயணம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்திய வீரர்கள் சிலர் துலீப் கோப்பையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துலீப் கோப்பை இம்முறை 2023-24 பருவத்தில் நடைபெற்றதைப்போல மண்டல வாரியாக 6 அணிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெறவிருக்கிறது.