இந்திய அணி முதல்முறையாக...: இந்திய ரசிகர்கள் படிக்க விரும்பாத புள்ளிவிவரங்கள்!

குறைந்த ரன்கள் கொண்ட இலக்கில் இந்தியா தோற்றுள்ளது இது 2-வது முறை.
இந்திய அணி முதல்முறையாக...: இந்திய ரசிகர்கள் படிக்க விரும்பாத புள்ளிவிவரங்கள்!
1 min read

இதுவரை, இந்தியாவில் ஒருமுறை டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து, மும்பை டெஸ்டை வென்று இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. சொந்த மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்றுள்ளது இந்தியா. இதுபோன்ற சில முக்கியமான புள்ளிவிவரங்கள்:

* 2024-ல் சொந்த மண்ணில் இந்தியா விளையாடிய 10 டெஸ்டுகளில் 4-ல் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்பு 1969-ல் ஒரே வருடத்தில் சொந்த மண்ணில் 4 டெஸ்டுகளில் தோற்றது இந்தியா.

* சொந்த மண்ணில் 5 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளார் ரோஹித் சர்மா. சொந்த மண்ணில் அதிக டெஸ்டுகளில் தோற்ற கேப்டன்களில் ரோஹித் சர்மாவுக்கு 2-வது இடம். பட்டோடி, 9 தோல்விகளை அடைந்துள்ளார்.

* மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்டுகளில் விளையாடி முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என்றும் 1980-ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்றும் இந்தியா முழுமையாகத் தோற்றுள்ளது.

* சொந்த மண்ணில் இலக்கை விரட்டும்போது முதல்முறையாக 200 ரன்களுக்குக் குறைவான இலக்கை எட்ட முடியாமல் தோற்றுள்ளது இந்தியா. 31 முறை இந்த இலக்கை இந்தியா எட்டி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 1987-ல் பெங்களூரில் பாகிஸ்தான் நிர்ணயித்த 221 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோற்றது.

* குறைந்த ரன்கள் கொண்ட இலக்கில் இந்தியா தோற்றுள்ளது இது 2-வது முறை. இதற்கு முன்பு, 1997 பிரிட்ஜ்டவுனில் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக 120 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோற்றது.

* வான்கடேவில் விளையாடிய 2 டெஸ்டுகளில் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஜாஸ் படேல். இந்திய மைதானங்களில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டுகளில் விளையாடி வேறு யாரும் இத்தனை விக்கெட்டுகளை எடுத்ததில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in