
முதல் ஒருநாள் ஆட்டம் போல மோசமான பேட்டிங் இல்லையென்றாலும் இந்திய அணி எடுத்த 264 ரன்கள் போதவே இல்லை. 22 பந்துகள் மீதமிருக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, ஒருநாள் தொடரையும் 2-0 என்கிற முன்னிலையுடன் வென்றுள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மீண்டும் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஷுப்மன் கில்லை 9 ரன்களுக்கும் ரன் எதுவும் எடுக்கவிடாமல் கோலியையும் ஆட்டமிழக்கச் செய்தார் பார்ட்லெட். ஆஸி. ஒருநாள் அணியில் இடம்பெற்று தனது 4-வது ஒருநாள் ஆட்டத்திலேயே நம்பிக்கை நட்சத்திரமாக அவர் பார்க்கப்படுகிறார்.
இதன்பிறகு ரோஹித் சர்மாவும் ஷ்ரேயஸ் ஐயரும் அட்டகாசமான கூட்டணி அமைத்தார்கள். 10 ஓவர்களின் முடிவில் 29 ரன்கள் தான் இந்தியா எடுத்திருந்தது. 17 ஓவர்களில் 66 ரன்கள் தான். ஓவன் வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ரோஹித் சர்மா. ஸ்ரேயஸ் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் அமர்க்களமான 17 ரன்கள். அப்படியும் 20 ஓவர்களில் ஸ்கோர் 86/2 தான். அரை சதமெடுத்த ரோஹித் 29-வது ஓவரில் 97 பந்துகளில் 73 ரன்களுடன் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். 67 பந்துகளில் அரை சதமெடுத்த ஸ்ரேயஸுக்கு இந்திய அணியின் இன்னிங்ஸை வழிநடத்தும் பொறுப்பு உண்டானது. எனினும் அவர் 61 ரன்களில் ஸாம்பா பந்தில் போல்ட் ஆனார். இன்று நடு ஓவர்களில் இந்திய அணியைக் கிடுக்குப்பிடி போட்டார் ஸாம்பா. இதனால் பெரிய ஸ்கோர் எடுக்க இந்திய அணி மிகவும் தடுமாறியது. 11 ரன்களில் ராகுலையும் போல்ட் செய்தார் ஸாம்பா. அப்போது அணியின் ஸ்கோர் 174/4. இதன்பிறகு இந்திய அணி 300 ரன்கள் எடுப்பது ஆல்ரவுண்டர்களின் கையில் தான் இருந்தது. ஆனால் வாஷிங்டன் 12 ரன்களிலும் நன்கு விளையாடிய அக்ஷர் படேல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். தனது 9-வது ஓவரில் அக்ஷர், நிதிஷ் ரெட்டி என இருவரையும் ஸாம்பா வீழ்த்தினார். இதன்பிறகு ஷர்ஷித் ராணா கொஞ்சம் ரன்கள் சேர்த்தார். ஸாம்பாவின் கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 264/9 ரன்கள் சேர்த்தது. ஹர்ஷித் ராணா ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். இந்த ஸ்கோர் போதுமா என்கிற கேள்வி அப்போதே இருந்தது.
விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 265 ரன்கள் இலக்கெல்லாம் பெரிய விஷயமில்லை என்பது போல விளையாடியது ஆஸி. அணி. முதல் 41 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் பவுண்டரியே 7-வது ஓவரின் முடிவில் தான் கிடைத்தது. 11 ரன்களில் கேப்டன் மிட்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். 13-வது ஓவரில் 28 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட், ஹர்ஷித் ராணா பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் ஸ்கோர் 103/2. பிறகு ரென்ஷா 30 ரன்களுக்கும் அலெக்ஸ் கேரி 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்த பிறகு ஆஸி. ரசிகர்களுக்கு லேசாகப் பதற்றம் ஏற்பட்டிருக்கும். ஆஸி. இன்னிங்ஸை அழகாக வழிநடத்திய மேத்யூ ஷார்ட், 74 ரன்கள் எடுத்து ஹர்ஷித் ராணா பந்தில் 36-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கூப்பரும் மிட்செல் ஓவனும் மேலும் சேதாரம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். 40 ஓவரின்போது 60 பந்துகளில் 49 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஓவன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் பாதிப்பு ஏற்படாமல் 46.2 ஓவர்களில் 265/8 என இலக்கைப் பாதுகாப்பாக அடைந்து வெற்றியடைந்தது ஆஸி. அணி. கூடவே ஒருநாள் தொடரையும் 2-0 என்கிற முன்னிலையுடன் வென்றது.
4 விக்கெட்டுகள் எடுத்த ஸாம்பா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். கோலி 3-வது ஒருநாள் ஆட்டத்திலாவது நன்றாக விளையாடுவாரா, இத்தனை ஆல்ரவுண்டர்கள் ஓர் அணிக்கு அவசியமா எனப் பல கேள்விகளுடன் சிட்னியில் விளையாடவுள்ளது இந்திய அணி.
Though India’s batting wasn’t as poor as in the first ODI, their total of 264 proved insufficient. Australia chased it down with 22 balls to spare and won by 2 wickets, sealing the ODI series 2–0.