
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெயிஸ்வால் கோவாவுக்கு மாறவுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அவர் தடையில்லாச் சான்றிதழ் கோரியுள்ளார்.
யஷஸ்வி ஜெயிஸ்வால் இயல்பில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியது மும்பையில் தான். ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஜெயிஸ்வால், அவருடைய இள வயது பயிற்சியாளர்/ஆலோசகர் ஜுவாலா சிங்கால் அடையாளம் காணப்பட்டார்.
16 வயதுக்குள்பட்ட பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து கவனம் பெற்றார். மும்பை அணியில் இடம்பெறுவதற்கு முன்பு 16 வயதுக்குள்பட்டோர், 19 வயதுக்குள்பட்டோர் மற்றும் 23 வயதுக்குள்பட்டோருக்கான மும்பை அணியில் சிறப்பாகச் செயல்பட்டார் ஜெயிஸ்வால்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்ததன் பலனாக இந்திய அணியிலும் அவருக்கான வாய்ப்பு கதவைத் தட்டியது.
தொடர்ச்சியாக மும்பை அணிக்காக விளையாடி வரும் ஜெயிஸ்வால் தற்போது கோவாவுக்கு இடம்பெற முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லாச் சான்றிதழை அவர் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2025-26 பருவம் முதல் கோவா அணிக்காக விளையாடவுள்ள யஷஸ்வி ஜெயிஸ்வால் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் மும்பைக்காக 36 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜெயிஸ்வால், 12 சதங்கள், 12 அரை சதங்கள் உள்பட 3,712 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2019-ல் சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக அறிமுகமானார். கடைசியாக ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார்.
ஏற்கெனவே அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லேட் ஆகியோர் மும்பையிலிருந்து கோவா அணிக்கு மாறினார்கள்.