
குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் லக்னௌவில் மோதின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க பேட்டர் குயின்டன் டி காக், உமேஷ் யாதவ் வீசிய இன்னிங்ஸின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கலையும் வீழ்த்தி உமேஷ் யாதவ் அசத்தினார்.
கேப்டன் ராகுலும், ஸ்டாய்னிஸும் கூட்டணி அமைத்தார்கள். பவர்பிளே முடிவில் லக்னௌ 47 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிந்து இரு பவுண்டரிகள் மட்டுமே லக்னௌ அடித்ததால், 10 ஓவர்கள் முடிவில் 74 ரன்கள் எடுத்தது. கூட்டணி அமைத்து அதிரடிக்கான கியரை மாற்ற வேண்டிய நேரத்தில் 31 பந்துகளில் 33 ரன்களுக்கு ராகுல் ஆட்டமிழந்தார். இதனால், 14 ஓவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது லக்னௌ.
ரன்ரேட்டை உயர்த்த முனைப்பு காட்டி தர்ஷன் நால்கண்டே ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்தார் ஸ்டாய்னிஸ். 40-வது பந்தில் அரை சதத்தை எட்டிய இவர், சிக்ஸர்கள் அடித்த ஓவரிலேயே 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி மூன்று ஓவர்களில் பூரன் மற்றும் பதோனி பேட்டிலிருந்து பவுண்டரிகள் எட்டிப் பார்த்தன. இந்த 3 ஓவர்களில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால் லக்னௌவுக்கு 37 ரன்கள் கிடைத்தன.
20 ஓவர்கள் முடிவில் லக்னௌ 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பூரன் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
164 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினார்கள். ஸ்டாய்னிஸுக்குப் பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய மணிமாறன் சித்தார்த், தனது பந்துவீச்சு மூலம் இன்னிங்ஸை தொடங்கினார். முதலிரு ஓவர்களில் இவர் 9 ரன்களை மட்டுமே கொடுத்தார்.
எனினும், நவீன் உல் ஹக் மற்றும் மயங்க் யாதவ் ஓவர்களில் சாய் சுதர்சன் தலா இரு பவுண்டரிகள் அடித்தார். அசுரப் புயல் மயங்க் யாதவுக்கு அவருடைய இயல்பான வேகம் பிடிபடவில்லை. பெரும்பாலான பந்துகளை 140 கி.மீ. வேகத்துக்கும் குறைவாகவே வீசியது ஆச்சர்யமளித்தது. இவர் காயம் காரணமாக பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறியபோது இதற்கான காரணம் புரிந்தது.
முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்து வெற்றிக்குத் தேவையானதைவிட அதிகமாகவே ரன் எடுத்திருந்தது குஜராத். யஷ் தாக்குர் ஓவரில் முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி வந்த கில், பவர்பிளேயின் கடைசிப் பந்தில் கால்களை நகர்த்தாமல் விளையாடி போல்டானார்.
இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய கேன் வில்லியம்சன், பிஷ்னாயின் அட்டகாசமான கேட்சில் ஆட்டமிழந்தார். சூழலைப் பயன்படுத்தி கிருனாள் பாண்டியா அற்புதமாகப் பந்துவீசினார். சாய் சுதர்சன், சரத் பிஆர் மற்றும் தர்ஷன் நால்கண்டே விக்கெட்டுகள் அவருக்கு அறுவடையாக அமைந்தன.
12.1 ஓவர்களில் 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது குஜராத். கிருனாள் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சரிவிலிருந்து மீள தெவாடியா உதவுவார் என்ற எதிர்பார்த்தால், அடுத்து வந்த பின்வரிசை பேட்டர்கள் பொறுப்பில்லாமல் விளையாட்டி யஷ் தாக்குரிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள்.
விக்கெட்டுகள் வரிசையாக சரிந்ததால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 14-ஐ தாண்டியது. களத்தில் தனியாக நின்று போராடிக் கொண்டிருந்த தெவாடியா 19-வது ஓவரில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதே ஓவரில் நூர் அஹமதையும் வீழ்த்திய யஷ் தாக்குர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குஜராத் வெற்றியையும் உறுதி செய்தார். 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்குச் சுருண்டது குஜராத். யஷ் தாக்குர் 5 விக்கெட்டுகளையும், கிருனாள் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னௌ, ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக குஜராத் டைடன்ஸை வீழ்த்தியது. புள்ளிகள் பட்டியலில் லக்னௌ 6 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குஜராத் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளன.