
ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆர்சிபி வீரர் யஷ் தயால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள், கடந்த 2023-ம் ஆண்டில் ஒரு சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி ஜெய்ப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னை யஷ் தயால் பாலியல் வன்கொடுமை செய்ததாக உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் குற்றம்சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு இத்தகைய குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.
முதலில் கடந்த 2023-ம் ஆண்டிலும், அதன்பிறகு நடப்பாண்டு ஐபிஎல் போட்டிக்காக ஜெய்ப்பூர் வந்தபோது ஹோட்டலில் வைத்தும், அந்த சிறுமியை யஷ் தயால் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் சங்கனேர் சதர் காவல் நிலையத்தின் அதிகாரி அனில் குமார் ஜெய்மான், யஷ் தயாளின் அடையாளத்தை உறுதிப்படுத்தினார். கடந்த புதன்கிழமை (ஜூலை 23) அன்று, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 64 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் பிரிவுகள், ஆகியவற்றின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸியாபாத் வழக்கில் தயாளை கைது செய்வதற்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 15 அன்று தடை விதித்தது. அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.