உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் ககிசோ ரபாடாவும் இடம்பெற்றுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை லண்டன் லார்ட்ஸில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இதற்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவும் தற்போது 15 வீரர்களைக் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியும் பெரும் வேகப்பந்துவீச்சு படையுடன் களமிறங்குகிறது. ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சியடையாத ககிசோ ரபாடா ஒரு மாத தடைக்காலத்தை நிறைவு செய்ததால், தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்தாண்டு ஆகஸ்டுக்கு பிறகு டெஸ்டில் விளையாடாத லுங்கி என்கிடி அணிக்குத் திரும்பியுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு கேஷவ் மஹாராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் செனுரான் முத்துசாமி உள்ளார்கள்.
பேட்டிங்கில் டோனி டி ஸார்ஸி, எய்டன் மார்க்ரம், ரயன் ரிக்கெல்டன், டெம்பா பவுமா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் என முக்கிய வீரர்கள் உள்ளார்கள்.
தென்னாப்பிரிக்க அணி:
டோனி டி ஸார்ஸி, எய்டன் மார்க்ரம், ரயன் ரிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்கம், கைல் வெரீன், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, கேஷவ் மஹாராஜ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டேன் பேட்டர்சன்.