உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா டெஸ்டில் இதுவரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
படம்: https://x.com/ICC
2 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய சாம்பியன் ஆகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டன் லார்ட்ஸில் மோதின. கடந்த 11 அன்று தொடங்கிய இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் எடுத்தார்கள். தென்னாப்பிரிக்காவில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா மிட்செல் ஸ்டார்கின் திடமான அரை சதத்தால் 207 ரன்கள் எடுத்து 282 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

மூன்றாவது நாளில் ஆடுகளம் பேட்டிங்குக்கு ஒத்துழைத்ததால், எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கூட்டணி அமைத்தார்கள். மார்க்ரம் சதமடித்த, பவுமா அரை சதம் அடித்தார். 3-வது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 4-வது ஆட்டத்தை மார்க்ரம் மற்றும் பவுமா தொடங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்க்ரம் - பவுமா இணை 147 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்டார்க் பந்தில் போல்டானார்.

எனினும், மார்க்ரம் விடாப்பிடியோடு களத்தில் நின்றார். டேவிட் பெடிங்காமும் மார்க்ரமுடன் இணைந்து நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவை வரலாற்று வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, 136 ரன்கள் எடுத்த மார்க்ரம் ஆட்டமிழந்தார்.

டேவிட் பெடிங்காம் மற்றும் கைல் வெரின் தென்னாப்பிரிக்காவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்கள். கடைசியாக 1998-ல் ஐசிசி நாக் அவுட் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா, 27 வருடக் காத்திருப்புக்குப் பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

நடந்து முடிந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் 5 டெஸ்டுகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற தென்னாப்பிரிக்கா, அடுத்து விளையாடிய 8 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா டெஸ்டில் இதுவரை ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்கா ரூ. 31.05 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெறுகிறது. இறுதிச் சுற்றில் தோற்ற ஆஸ்திரேலியா ரூ. 18.63 கோடியைப் பரிசுத் தொகையாகப் பெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in