
நடப்பு ரஞ்சி கோப்பை பருவத்துடன் தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார்.
2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் சாஹா அறிமுகமானார்.
எம்எஸ் தோனியால் இவருக்குப் பெரும்பாலும் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. 2014-ல் தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் முழுநேர கீப்பராக சாஹா செயல்பட்டார்.
இந்தியாவுக்காக 40 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சாஹா, 3 சதங்கள், 6 அரை சதங்கள் உள்பட 1,353 ரன்களும் 9 ஒருநாள் ஆட்டங்களில் 41 ரன்கள் எடுத்துள்ளார்
ரிஷப் பந்தின் வருகை இவரை மீண்டும் ஓரங்கட்டியது. பேட்டிங்கில் ரிஷப் பந்த் பெரிய பங்களிப்பைச் செலுத்தியதால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சாஹாவின் வயதும் ஒரு காரணமாக அமைய, இந்திய அணி கேஎஸ் பரத், இஷான் கிஷன், துருவ் ஜூரெல் என இளம் விக்கெட் கீப்பர்களை நோக்கி நகரத் தொடங்கியது.
ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் வரை அனைத்து வருடமும் பங்கேற்றார். கேகேஆர், சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், குஜராத் போன்ற அணிகளில் விளையாடிய இவர் 170 ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்று ஒரு சதம், 13 அரைசதம் உள்பட 2934 ரன்கள் எடுத்துள்ளார்.
2023-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியிலும் சாஹா இடம்பெற்றார். சாஹா, அடுத்த வருட ஐபிஎல்-லில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
முதல்தர கிரிக்கெட்டில் 138 ஆட்டங்களில் பங்கேற்று 14 சதங்கள், 43 அரைசதங்கள் உள்பட 7013 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில், பெங்கால் அணிக்காக இந்தப் பருவத்தில் ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் விளையாடியதோடு தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக சாஹா தெரிவித்துள்ளார்.