
இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான ரித்திமான் சஹா அனைத்து விதமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
ரஞ்சியில் பெங்கால் அணியின் வழக்கமான விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா, இந்தியன் கிரிக்கெட் லீகில் விளையாட ஒப்பந்தம் ஆனார். இதைத் தொடர்ந்து, பெங்கால் அணியின் விக்கெட் கீப்பர் ஆனார் சஹா.
அறிமுக ரஞ்சி ஆட்டத்திலேயே சதமடித்த 15-வது பெங்கால் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சாஹா. பெங்கால் அணிக்காக ஆடிய இவர், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். 2008 முதல் 2024 வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வெகு சிலரில் சஹாவும் ஒருவர்.
ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணியின் வாய்ப்பு சஹாவுக்கு ஒரு விபத்தாகவே அமைந்தது. எம்எஸ் தோனியால் நிறைய வாய்ப்பை இழந்த விக்கெட் கீப்பர்களில் சஹாவும் ஒருவர்.
2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட, கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டு இந்தியாவுக்காக அறிமுகம் ஆனார் சஹா.
இரண்டாவது டெஸ்ட் வாய்ப்பு, 2012-ல் அடிலெய்டில் கிடைத்தது. அதுவும் எம்எஸ் தோனி ஒரு டெஸ்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், சஹாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. 2014-ல் எம்எஸ் தோனி டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியில் சஹாவின் இடம் ஓரளவுக்கு நிரந்தரமானது.
சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது சாதாரண காரியமல்ல என்பதை அனைவரும் உணர்ந்தபோது, அதற்கான மாஸ்டர் கிளாஸை நடத்தி வந்தவர் சஹா.
கீப்பிங்கில் மிரட்டி வந்தாலும், பேட்டிங்கில் இந்திய அணியின் எதிர்பார்ப்பை அவரால் பெரிதளவில் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதற்கேற்ப ரிஷப் பந்தும் அதற்குள் டெஸ்டில் எழுச்சி பெற்றுவிட்டார். சஹாவிடம் இருந்த வாய்ப்பை 2018-ல் ரிஷப் பந்த் பெற்றுக்கொண்டார்.
எம்எஸ் தோனி - ரிஷப் பந்த் காலத்துக்கு நடுவே சிக்கியது சஹாவின் துரதிருஷ்டம். 2022-ல் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணியில் ரிஷப் பந்துக்கு மாற்று விக்கெட் கீப்பராக சஹாவிடமிருந்து நகர்ந்து, கேஎஸ் பரத்தைத் தேர்வு செய்ய முன்வந்தது. சஹாவுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்தது.
2022-ல் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஊடகவியலாளர் ஒருவர் பேட்டிக்காக தன்னை மிரட்டியதை சஹா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவெளியில் அம்பலப்படுத்தினார். சஹாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பிசிசிஐ, அந்த ஊடகவியலாளருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தியாவுக்காகக் கடைசியாக 2021-ல் விளையாடிய சஹா 40 டெஸ்டுகளில் 3 சதங்கள் உள்பட 29.41 சராசரியில் 1,353 ரன்கள் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 142 ஆட்டங்களில் 7,169 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 41.43.
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுக்காக சஹா விளையாடியுள்ளார். சிஎஸ்கேவுக்காக விளையாடியதும் தொடக்க பேட்டராக களமிறங்கி பவர்பிளேயில் பவுண்டரிகளை விளாசியதும் 2014 ஐபிஎல் இறுதிச் சுற்றில் சதம் அடித்ததும் பாய்ந்து கேட்சுகளை பிடித்ததும் ரசிகர்கள் மனதிலிருந்து என்றும் நீங்காது.