
டபிள்யுபிஎல் 2025 போட்டியை சாதனை வெற்றியைப் பெற்று அதிரடியுடன் தொடங்கியுள்ளது நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
மகளிர் பிரிமீயர் லீகின் (டபிள்யுபிஎல்) மூன்றாவது பருவம் வதோதராவில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
குஜராத்தில் அனுபவமிக்க பெத் மூனி, லாரா வோல்வார்தட் களமிறங்கினார்கள். பெத் மூனி ஓரளவுக்கு அதிரடி காட்ட, வோல்வார்தட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் விக்கெட் விழுந்ததால், அதிரடி காட்ட முடியாமல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது குஜராத்.
அடுத்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 4 ரன்களுக்கு அஹுஜா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும், பெத் மூனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஒத்துழைப்பு கொடுத்து விளையாடினார்.
10-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த மூனி, 37 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். குஜராத் 10 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தது. மூனி 56 ரன்கள் எடுத்து பிரேமா ராவத் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டுக்கு பிறகு, கார்ட்னர் அதிரடியைக் கையிலெடுத்தார்.
ராவத் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரிகள் பறந்தன. குஜராத் ரன் ரேட் ஓவருக்கு 9-ஐ நெருங்கியது. கார்ட்னர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கார்ட்னருடன் ஓரளவுக்கு அதிரடி காட்டிய டாட்டின் 13 பந்துகளில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கார்ட்னர் - டாட்டின் இணை 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷைக்கும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 180 ரன்களை கடப்பது சவாலாக இருந்த நிலையில், 19-வது ஓவர் முடிவில் 192 ரன்களுக்கு விரைந்தது. கடைசி ஓவர் சிறப்பாக வீசப்பட்டாலும், கடைசி இரு பந்துகளை ஹர்லீன் தியோல் பவுண்டரிகளுக்கு விரட்டினார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 79 ரன்கள் விளாசினார்.
202 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலிரு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி அதிரடி தொடக்கம் தந்தார். எனினும் அடுத்த ஓவரிலேயே அவர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் வியாத் ஹாட்ஜ் ஆட்டமிழந்தார்.
இரு விக்கெட்டுகள் விழுந்தாலும், அனுபவமிக்க எலிஸ் பெர்ரி ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி செல்வதை உறுதி செய்து நெருக்கடியை அதிகரிக்கவிடாமல் பார்த்துக் கொண்டார். ராக்வி பிஸ்டும் ஒத்துழைப்பு கொடுத்தார். 6 ஓவர்களில் ஆர்சிபி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. எலிஸ் பெர்ரி 27 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.
25 ரன்கள் எடுத்த பிஸ்ட் 11-வது ஓவரில் ஆட்டமிழந்தார். குறுகிய இடைவெளியில் பெர்ரியும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 7 ஓவர்களில் 89 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமான சூழல் உருவானது.
எனினும் கனிகா அஹுஜா மற்றும் ரிச்சா கோஷ் இணை பதற்றம் இல்லாமல் குஜராத் பந்துவீச்சை எதிர்கொண்டது. சயாலி ஓவரில் அஹுஜா இரு பவுண்டரி அடிக்க, ஓவர் த்ரோ மூலம் கூடுதலாக ஒரு பவுண்டரி கிடைத்தது. இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள்.
இரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கார்டனர் பந்துவீச வந்தார். இவருடைய ஓவரில் ரிச்சா கோஷ் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை நொறுக்கினார். இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைக்க, 5-வது விக்கெட்டுக்கு கனிகா - ரிச்சா கோஷ் இணை 50 ரன்களை கடந்தது.
பந்துவீச யார் வந்தாலும் பவுண்டரி தான் என விளையாடிய இந்த இணை விளையாட, அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகள். பிரியா மிஷ்ரா வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர். 23 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் ரிச்சா கோஷ். 19-வது ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட ரிச்சா கோஷ், ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தார்.
18.3 ஓவர்களிலேயே 9 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து ஆர்சிபி சாதனை வெற்றியைப் பெற்றது. டபிள்யுபிஎல் வரலாற்றில் இதுவரை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கனிகா அஹுஜா 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, டபிள்யுபிஎல் 2025 போட்டியை சாதனை வெற்றியைப் பெற்று அதிரடியுடன் தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.