இந்திய அணியின் பயிற்சியாளராக விருப்பம் உள்ளது: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதன்முறையாக அவர் மௌனம் கலைத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், இந்திய அணிக்குப் பயிற்சியளிப்பதைவிட வேறு பெருமை எதுவும் இருக்க முடியாது என்றும் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் ஜூன் இறுதியில் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைகிறது. இவருக்கு அடுத்தபடியாக ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2027 வரையிலான புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 27 வரை பெறப்பட்டன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் விண்ணப்பிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிட முடியாது என்பதால் இதற்கு விண்ணப்பிக்கப்போவதில்லை என்று தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகர் கௌதம் கம்பீரும் இதற்கு விண்ணிப்பிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இவற்றுக்கு மத்தியில் அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு எந்தவொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரரையும் பிசிசிஐ அணுகவில்லை என்றார். மேலும், இந்திய கிரிக்கெட் அமைப்பு குறித்த ஆழமான புரிதல் கொண்ட, இந்தச் சூழலிலிருந்து வந்த ஒருவரைக் கண்டறிவதில் தாங்கள் கவனமாக இருப்பதாகவும், ஜெய் ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதி என ஒரு ஐபிஎல் அணியின் உரிமையாளர் தகவல் தெரிவித்ததாகச் செய்திகள் கசிந்தன. தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீரைச் சுற்றியே செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, தான் நியமிக்கப்பட்டால் அது தனக்குக் கிடைத்த பெருமை என்றும் தனக்கு அதில் விருப்பம் இருப்பதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார். அபுதாபியிலுள்ள மருத்துவமனை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட கௌதம் கம்பீர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இந்திய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்தும், உலகக் கோப்பையை வென்ற அனுபவம் குறித்தும் மாணவர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு கம்பீர் பதிலளித்ததாவது:

"நிறைய பேர் என்னிடம் கேட்டபோதும்கூட நான் இதற்குப் பதிலளிக்கவில்லை. ஆனால், தற்போது உனக்குப் பதிலளிக்க வேண்டும். இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பதைவிட வேறு பெருமை எதுவும் கிடையாது. 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக இருப்பது பெருமை" என்று கம்பீர் சிரித்தபடி பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in