உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று லண்டன் லார்ட்ஸில் ஜூன் 11 - 15 வரை நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை மற்றும் தெ.ஆ. ஆகிய அணிகள் முறையே 3,4- வது இடங்களில் உள்ளன.
தெ.ஆ. அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தெ.ஆ. அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கு முன்பாக 5 ஆட்டங்கள் மீதமுள்ளது. அதில், 4-ல் வெற்றி பெற்றால் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் 7 டெஸ்டுகள் (தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டையும் சேர்த்து) மீதமுள்ளது. இதில் 4-ல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். 7 டெஸ்டுகளில் 5 டெஸ்டுகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகிறது. ஏற்கெனவே, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை மீதமுள்ள 7 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும். இலங்கை அணி மீதமுள்ள 4 டெஸ்டுகளில் 3-ல் வெற்றி பெற வேண்டும்.