
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததால், இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் விளையாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பிஜிடி தொடரின் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த இரு நாள்களில் தெ.ஆ. அணி இலங்கையையும், இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும் வீழ்த்தின. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததால் தரவரிசையில் 3-வது இடத்துக்குச் சென்றது. அதேபோல தெ.ஆ. அணி வெற்றி பெற்றதன் மூலம் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, பிஜிடி தொடரில் இந்திய அணி 4-0 என வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் விளையாட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், நியூசிலாந்து தோல்வியடைந்தது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.
பிஜிடி தொடரின் மீதமுள்ள 4 ஆட்டங்களில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றாலே போதுமான நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் தெ.ஆ. அணி மீதமுள்ள 3 டெஸ்டுகளில் 2-ல் வெற்றி பெற வேண்டும். 3-வது இடத்தில் இருக்கும் ஆஸி. அணி மீதமுள்ள 6 டெஸ்டுகளில் குறைந்தது 4 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை மீதமுள்ள 3 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிச்சுற்றை குறித்து சிந்திக்கமுடியும்.
ஏற்கெனவே, பிஜிடி தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்னும் 2 டெஸ்டுகளில் வெற்றி பெறும் நிலையில், தொடர்ச்சியாக 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் விளையாடும்.