வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் முடிவு கிடைக்காத பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் செப். 27 அன்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டம் பாதியில் மழையால் பாதிக்கப்பட்டது. இதன் பிறகு 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 3-வது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 நாள்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த டெஸ்டில் முடிவு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒருவேளை இந்த டெஸ்டில் முடிவு கிடைக்காத பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணிக்கு இன்னும் 8 டெஸ்டுகள் (வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டை சேர்க்காமல்) மீதமுள்ளன. ஒருவேளை வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் முடிவு கிடைக்கவில்லை என்றால், அடுத்த 8 டெஸ்டுகளில் இந்தியா 5-ல் வெற்றி பெற வேண்டிய நிலைமை ஏற்படும்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணிக்கு, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாடவுள்ள 5 டெஸ்டுகளும் சவால் நிறைந்ததாக இருக்கும்.
இந்திய அணிக்கு 5 டெஸ்டுகளில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.