உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?
2 min read

இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மே.இ. தீவுகள் ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளன.

2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்று லண்டன் லார்ட்ஸில் ஜூன் 11 - 15 வரை நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே 3,4- வது இடங்களில் உள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் வங்கதேச அணி 4-வது இடத்தைப் பிடித்தது.

2025-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

இந்தியா - தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கு இறுதிச் சுற்றுக்கு முன்பாக 10 ஆட்டங்கள் உள்ளது. இதில் 5-ல் வெற்றி பெற்றாலே இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகிவிடும். வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா சென்று விளையாடவுள்ள 5 டெஸ்டும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

ஆஸ்திரேலியா - 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவுக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரும், இலங்கைக்கு எதிராக 2 ஆட்டங்கள் கொண்ட தொடரும் உள்ளன. மொத்தம் உள்ள 7 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு இறுதிச் சுற்று வாய்ப்பு உறுதியாகிவிடும்.

3-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணிக்கு இன்னும் 8 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதில், 3 டெஸ்டுகளில் இங்கிலாந்துடன் தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. 8-ல் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுகள் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு இறுதிச் சுற்று வாய்ப்பு அதிகரிக்கும்.

அடுத்ததாக முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் தங்களுக்கு மீதமுள்ள 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தாலும் மற்ற அணிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

இங்கிலாந்து - சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 6-வது இடத்தில் உள்ளது. 16 ஆட்டங்களில் விளையாடி அதில் 7-ல் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ளன. அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

அதேபோல் முறையே 8 மற்றும் 9-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் மே.இ. தீவுகள் அணிகளுக்கும் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பு மந்தமாகவே உள்ளது.

எனவே, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் மே.இ. தீவுகள் ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளன.

தென்னாப்பிரிக்கா - தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் தெ.ஆ. அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் மீதமுள்ளன. வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 2 ஆட்டங்களில் விளையாட உள்ள தெ.ஆ. அணி அதில் 5-ல் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பு குறித்து சிந்திக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in