விம்பிள்டன்: அல்கராஸை வீழ்த்தி பட்டம் வென்றார் சின்னர்! (காணொளி)
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கர்லோஸ் அல்கராஸை வீழ்த்தி யானிக் சின்னர் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீரர் கர்லோஸ் அல்கராஸ் மற்றும் உலகின் நெ. 1 வீரரான இத்தாலியின் வீரர் யானிக் சின்னர் மோதினார்கள். டென்னிஸ் Graஉலகைக் கட்டி ஆளும் இருவரும் இறுதிச் சுற்றில் விளையாடுவதால், ஆதிக்கம் செலுத்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் இருவரும் மோதினார்கள். சுமார் 5.30 மணி நேரம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இருவரும் கடுமையாகப் போராடினார்கள். இறுதியில் கர்லோஸ் அல்கராஸ் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார்.
கடைசியாக நடைபெற்ற 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இவர்கள் இருவர் மட்டுமே 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள்.
விம்பிள்டன் போட்டியில் மட்டும் 2022 முதல் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் விம்பிள்டன் 2025 இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார் அல்கராஸ். கடைசியாக விளையாடிய 24 ஆட்டங்களில் ஒரு தோல்வியைக்கூட அல்கராஸ் சந்திக்கவில்லை.
அல்கராஸ் மற்றும் சின்னர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8-4 என முன்னிலையில் இருந்தார் அல்கராஸ். மேலும், அண்மையில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் இறுதிச் சுற்றில் சின்னரை வீழ்த்தியதால், விம்பிள்டன் இறுதிச் சுற்றில் அல்கராஸ் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என டென்னிஸ் ரசிகர்கள் கணித்து வைத்திருந்தார்கள்.
இதற்கேற்ப விம்பிள்டன் இறுதிச் சுற்றின் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார் அல்கராஸ். ஆனால் அடுத்தடுத்த செட்களில் சின்னர் அதகளம் புரிந்தார்.
முதல் செட்டை அல்கராஸிடம் இழந்தாலும் 6-4, 6-4, 6-4 என மூன்று செட்களை கைப்பற்றி விம்பிள்டன் பட்டத்தை வென்றார் சின்னர்.
விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்துள்ளார்.
கடந்த இரு முறை விம்பிள்டன் பட்டத்தை வெல்ல முடிந்த அல்கராஸால் இம்முறை வெல்ல முடியவில்லை. சின்னர் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அல்கராஸ் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் கொண்டுள்ளார்கள்.
Wimbledon | Jannik Sinner | Carlos Alcaraz | Wimbledon Final | Grandslam