
சிங்கப்பூரில் இன்று தொடங்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது குகேஷும் சீனாவின் 32 வயது டிங் லிரனும் மோதுகிறார்கள்.
நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்வதற்கான 2024 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ஏப்ரலில் கனடாவில் நடைபெற்றது. கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியை 17 வயதில் வென்று சாதனை படைத்த குகேஷ், அப்போட்டியை வென்றதன் மூலம் ஆடவர் உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனுடன் மோதுவதற்கான தகுதியை அடைந்தார். இறுதிச் சுற்றில் உலக சாம்பியனுடன் மோதும் போட்டியாளர்களிலும் இள வயது வீரர் குகேஷ் தான். 2014-ல் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியரும் குகேஷ் தான்.
2014-ல் ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில் கார்ல்சனிடம் வீழ்ந்தார் ஆனந்த். இதையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஓர் இந்தியர் பங்கேற்கிறார்.
டிசம்பர் 14 வரை கிளாசிகல் முறையில் 14 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தேவைப்பட்டால் டை பிரேக் முறை பயன்படுத்தப்படும். சாம்பியன் பட்டம் பெற 7.5 புள்ளியைப் பெற வேண்டும்.
கிளாசிகல் முறைல் குகேஷும் டிங் லிரனும் மூன்று முறை மோதியதில் இரு ஆட்டங்களில் டிங் லிரன் வெற்றி பெற்றுள்ளார். ஓர் ஆட்டம் டிரா ஆகியுள்ளது.
இந்த ஆட்டத்தை நேரலையாக FIDE-யின் யூடியூப் மற்றும் எக்ஸ் தளப் பக்கங்களில் காணலாம்.