
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றிலிருந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார்.
ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும் இறுதிச் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸிலிருந்து தொடர்ச்சியாக எல்லா போட்டிகளிலும் பதக்கங்களை வென்று வருகிறார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டார். தகுதிச் சுற்றில் குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து தகுதி பெற்றார். 84.5 மீட்டருக்கு வீசினால் தகுதி பெற்றுவிடலாம்.
பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் கடந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருந்ததால், இவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்தது. இவர் குரூப் பி-யில் இடம்பெற்றிருந்தார். இவர் 85.28 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் முயற்சியில் அர்ஷத் நதீம் 82.73 மீட்டருக்கு வீசியிருந்தார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 83.65 மீட்டருக்கு வீசியிருந்தார். இருவருக்குமே இது சுமாரான தொடக்கம் தான். அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் 86.27 மீட்டருக்கு ஈட்டியை வீசியிருந்தார். முதல் முயற்சியின் முடிவில் நீரஜ் சோப்ரா 5-வது இடத்தில் இருந்தார். நதீம் 7-வது இடத்தில் இருந்தார். சச்சின் யாதவ் 2-வது இடத்தில் இருந்தார்.
இரண்டாவது முயற்சியில் 84.03 மீட்டருக்கு வீசியிருந்தார் நீரஜ் சோப்ரா. இருந்தபோதிலும், இவர் 8-வது இடத்திலேயே நீடித்தார். முதல் 5 முயற்சிகளின் முடிவில் நீரஜ் சோப்ரா 84.03 மீட்டருக்கு வீசியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. இதன் காரணமாக, 8-வது இடத்தில் தங்கி போட்டியிலிருந்து வெளியேறினார் நீரஜ் சோப்ரா. அர்ஷத் நதீம் 82.75 மீட்டருக்கு வீசி 10-வது இடத்தைப் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
சச்சின் யாதவ் மட்டும் நம்பிக்கையைப் பாதுகாத்து வந்தார். இறுதிச் சுற்றின் இறுதி முயற்சியிலும் அவரால் முந்தைய தூரத்தைக் கடக்க முடியவில்லை. கடைசி வாய்ப்பில் அவர் 80.95 மீட்டருக்கு மட்டுமே அவரால் வீச முடிந்தது. இதனால் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வாய்ப்பை சச்சின் யாதவால் பெற முடியவில்லை.
பதக்கம் வென்ற வீரர்கள்
கேஷொர்ன் வால்காட் (ட்ரினிடாட் & டொபாகோ) - 88.16 மீட்டர்
ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனெடா) - 87.38 மீட்டர்
கர்டிஸ் தாம்ப்சன் (அமெரிக்கா) - 86.67 மீட்டர்
இந்திய வீரர்கள் நிலை
சச்சின் யாதவ் - 86.27 மீட்டர் (4-வது இடம்)
நீரஜ் சோப்ரா - 84.03 மீட்டர் (8-வது இடம்)
Neeraj Chopra | Arshad Nadeem | Sachin Yadav | World Athletics Championships Final | World Athletics Championships |