

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவரிடம் இந்தூரில் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக அகீல் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களை இந்தூரில் விளையாடியது. அக்டோபர் 22 அன்று இங்கிலாந்துக்கு எதிராகவும் அக்டோபர் 25 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி.
இங்கிலாந்துக்கு ஆட்டத்துக்கு அடுத்த நாள் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் கஃபேவுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வீராங்கனைகள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்புக்கான பொறுப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். அவர் காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இந்தூர் குற்றப்பிரிவு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேஷ் டண்டோடியா கூறுகையில், "இரு வீராஙகனைகளுக்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டதாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்புக்கான மேலாளர் புகார் அளித்தார். இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து குற்றவாளி அகீலைக் கைது செய்துள்ளோம். இவர் கஜ்ரானா பகுதியைச் சேர்ந்தவர். ஆனால், தற்போது ஆசாத் நகரில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான புகார்கள் உள்ளன.
சம்பந்தப்பட்டவர்கள், பிசிசிஐ மற்றும் மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டோருடன் இந்தூர் காவல் ஆணையரகம் ஆலோசனை நடத்தியது. இதன்பிறகே, பாதுகாப்பு வளையங்கள் போடப்பட்டன. பாதுகாப்பு வளையம் எவ்வாறு மீறப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இந்தச் சம்பவம் அக்டோபர் 23 அன்று காலை 11 மணியளவில் நடந்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்துள்ளோம். ரேடிசன் விடுதியிலிருந்து கஃபேவுக்கு செல்லும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது" என்று கூறினார்.
பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா கூறுகையில், "இந்தச் சம்பவம் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தேவைப்பட்டால் பாதுகாப்புக்கான வழிமுறைகளை மீண்டும் மறுபரிசீலனை செய்வோம்" என்று உறுதியளித்தார்.
Two Australian women cricketers who arrived in India for the World Cup were sexually harassed in Indore, and the accused, identified as Aqeel, has been arrested by the police.
Team Australia | Australian Cricketers | Australian Players | Molestation | Indore | Indore Police | BCCI | MPCA |