மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: பெங்களூருவில் நடைபெறவிருந்த ஆட்டங்கள் மாற்றம்! | Chinnaswamy Stadium

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த பிறகு, சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் நடைபெறவே இல்லை.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: பெங்களூருவில் நடைபெறவிருந்த ஆட்டங்கள் மாற்றம்! | Chinnaswamy Stadium
2 min read

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆட்டங்களை நடத்த அனுமதி கிடைக்காததால், புதிய இடமாக நவி மும்பை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை செப்டம்பர் 30 அன்று தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் பெங்களூருவில் மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் தகுதி பெறுவதைப் பொறுத்து இறுதிச் சுற்று பெங்களூரு அல்லது கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் பெங்களூருவில் நடைபெறவிருந்த ஆட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. புதிய இடமாக நவி மும்பை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய அட்டவணை மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஆட்டத்தை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் காவல் துறையினரிடம் அனுமதி வாங்க முடியவில்லை எனத் தெரிகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத் தொடர்ந்து, அந்த மைதானத்தில் ஆட்டங்களை நடத்த முடியாமல் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் திணறி வருகிறது.

நவி மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் இந்தியா விளையாடும் இரு குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதுதவிர ஒரு குரூப் சுற்று ஆட்டம் மற்றும் அரையிறுதி ஆட்டம் என மொத்தம் 4 ஆட்டங்கள் நவி மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெறுகின்றன.

நவி மும்பை ஆட்டங்கள்

  1. அக்டோபர் 23 - இந்தியா vs நியூசிலாந்து

  2. அக்டோபர் 26 - இந்தியா vs வங்கதேசம்

  3. அக்டோபர் 20 - இலங்கை vs வங்கதேசம் (கொழும்பில் நடைபெறவிருந்தது)

  4. அக்டோபர் 30 - இரண்டாவது அரையிறுதி

  • அக்டோபர் 11 அன்று குவஹாத்தியில் நடைபெறவிருந்த இலங்கை, இங்கிலாந்து இடையிலான ஆட்டம் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • அக்டோபர் 10 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவிருந்த வங்கதேசம், நியூசிலாந்து இடையிலான ஆட்டம் குவஹாத்திக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • அக்டோபர் 26 அன்று குவஹாத்தியில் நடைபெறவிருந்த இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் இனி கிரிக்கெட் நடைபெறுமா?

ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றபிறகு, சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தது நாடு முழுக்க பெரும் சோகத்தையும் விமர்சனத்தையும் உண்டாக்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கமே வெற்றிப் பேரணியை நடத்துவதற்குக் காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த ஆணையம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெரியளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவதற்காக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு அனுமதி கொடுக்க அம்மாநில காவல் துறை மறுத்து வருகிறது. இதன் காரணமாகவே, மஹாராஜா டி30 போட்டி பெங்களூருவிலிருந்து மைசூருக்கு மாற்றப்பட்டது. ரசிகர்கள் யாரும் இல்லாமல் கிரிக்கெட்டை மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி கோரப்பட்டது. இதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Chinnaswamy Stadium | Bengaluru | ICC Women's World Cup | Women's World Cup

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in