
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் ஷார்ஜாவில் விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
கிரேஸ் ஹாரிஸ் நிதானமாக விளையாட, மறுமுனையில் மூனி 2 ரன்களிலும், ஜார்ஜியா வார்ஹம் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். இவர்களது விக்கெட்டுகளை ரேணுகா சிங் வீழ்த்தினார்.
இதன் பிறகு தஹ்லியா மெக்ராத் - கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் கூட்டணி அமைத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி 62 ரன்கள் சேர்த்த நிலையில், தஹ்லியா மெக்ராத் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ராதா யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கிரேஸ் ஹாரிஸ் 41 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தீப்தி சர்மா பந்தில் வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, எலிஸ் பெரி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். மறுமுனையில் யாரும் அவருடன் பெரிய கூட்டணியை அமைக்கவில்லை. எலிஸ் பெரி 23 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் பிறகு விளையாடிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. ஷெஃபாலி வெர்மா சற்று வேகமாக தொடங்கினாலும் 20 ரன்கள் மட்டுமே (ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் வெளியேறினார். அதிகம் எதிர்பார்த்த மந்தனாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கௌர் - தீப்தி சர்மா ஆகியோர் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரிச்சா கோஷ் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஒரு பக்கம் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தனியாக போராடி அரை சதம் அடித்தார். அவர் வேகமாக ரன்களை சேர்க்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்தில் ஹர்மன்பிரீத் ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் பூஜா வஸ்த்ராகரும், 3-வது பந்தில் அருந்ததி ரெட்டியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 4-வது மற்றும் 5-வது பந்துகளிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் சோஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹர்மன்பிரீத் கௌர் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மந்தமாகி உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியின் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொருத்தே, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது தெரியவரும். ஒருவேளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறும்.