மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று (அக். 9) இந்திய அணி இலங்கையுடன் மோதுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடவுள்ளது. இதில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி அடையும் பட்சத்தில் இந்திய அணியின் ரன் ரேட் உயரும். அதனால் மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே போதுமானதாக இருக்கும்.
ஒருவேளை, இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மீதமிருக்கும் இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும், இந்திய அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆனால், இந்திய அணி இவற்றில் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் அரையிறுதி வாய்ப்பு மந்தமாகிவிடும். மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்படும்.
இந்திய அணியின் ரன் ரேட், புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை விட மோசமாக உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது 2-வது பேட்டிங் செய்து இலக்கை 17-19 பந்துகள் மீதம் வைத்து எட்டினாலோ இந்திய அணியின் ரன் ரேட் சற்று உயர்ந்து ஏறத்தாழ நியூசிலாந்தின் ரன் ரேட்டை சமம் செய்யும்.
எனவே, இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.