குஜராத் டைடன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வில் ஜேக்ஸ் 10 சிக்ஸர்களை விளாசி சதமடிக்க, ஆர்சிபி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
குஜராத் அணி முதல் ஓவரிலேயே ஸ்வப்னில் சிங் சுழலில் ரித்திமான் சஹாவை இழந்தது. முதல் விக்கெட்டுக்கு பிறகு பவர்பிளேயில் பெரிய அதிரடி இல்லை. குறிப்பாக கேப்டன் கில் 100-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதால், 6 ஓவர்களில் அந்த அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பவர்பிளே முடிந்தவுடன் மேக்ஸ்வெல் சுழலில் கில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இரு தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் சிறப்பாகக் கூட்டணியைக் கட்டமைத்தார்கள். கரண் சர்மா ஓவரில் சாய் சுதர்சன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடிக்க, மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் ஷாருக் கானும் இதையே செய்தார்.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் 82 ரன்கள் எடுத்தது. 10-வது ஓவருக்கு பிறகு சிக்ஸர்கள் எளிதாகப் பறந்தன. இருவரும் அடுத்த 3 ஓவர்களில் 4 சிக்ஸர்கள், இரு பவுண்டரிகளை விளாசினார்கள். கிரீன் பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம் ஷாருக் கான் முதலில் அரை சதத்தை எட்டினார்.
30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஷாருக் கான், சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன், ஷாருக் கான் இணை 3-வது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தது.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் 138 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் அரை சதம் அடித்து கடைசிக் கட்ட அதிரடிக்குக் காத்திருந்தார்.
யஷ் தயால் வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன்கள் எடுத்தார்கள். மற்ற ஓவர்களில் குறைந்தபட்சம் 10 ரன்களுக்கு மேல் பறந்தன. ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியவில்லை. இன்னிங்ஸின் கடைசிப் பந்தை மில்லர் சிக்ஸருக்கு அனுப்ப, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது குஜராத்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். மில்லர் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
201 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபிக்கு டு பிளெஸ்ஸி அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். கோலி சற்று தடுமாற்றத்துடன் ஆரம்பிக்க, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் வீசிய 3-வது ஓவரில் டு பிளெஸ்ஸி இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார்.
சுதாரித்துக் கொண்டு சாய் கிஷோரை இந்த முறை 4-வது ஓவரிலேயே கொண்டு வந்தார் கில். பலனாக டு பிளெஸ்ஸி விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ், கோலியைப் போல சற்று தடுமாறினார். இதைப் பார்த்தவுடன் கோலி அதிரடிக்கு மாறினார். சாய் கிஷோர் வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்தார் கோலி. 6 ஓவர்களில் 63 ரன்களை எடுத்தது ஆர்சிபி.
நூர் அஹமது, ரஷித் கான் என இரு முனைகளிலும் ஆப்கன் சுழலர்களைக் கொண்டு விளையாடினார் கில்.
கோலி அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தி வந்தார். 10 ஓவர்களில் ஆர்சிபி 98 ரன்கள் எடுக்க, கோலி 32-வது பந்தில் அரை சதத்தை எட்டினார்.
மோஹித் சர்மா வந்தவுடன் 16 பந்துகளில் 16 ரன்கள் என 100 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிக் கொண்டிருந்த வில் ஜேக்ஸுக்கு டைமிங் கிடைக்கத் தொடங்கியது. இவரது ஓவரில் ஒரு சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்தார்.
நூர் அஹமது ஓவரில் கோலி ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 10-க்குக் கீழ் குறைந்தது. மீண்டும் சாய் கிஷோரை அழைத்தும் பலனில்லை. இவரது ஓவரிலும் சிக்ஸர் அடித்தார் ஜேக்ஸ்.
கடைசி 6 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. மோஹித் சர்மா 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், இரு பவுண்டரியை விளாசினார் ஜேக்ஸ். இதன்மூலம் 31-வது பந்தில் அரை சதத்தை எட்டினார்.
மோஹித் சர்மா ஓவரில் 29 ரன்கள் விளாசப்பட்டதால், கடைசி 5 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. 16-வது ஓவரை ரஷித் கான் வீசினார். முதல் பந்தில் 1 ரன் எடுத்த கோலி இந்தப் பருவத்தில் 500 ரன்கள் என்ற மைல்கல்லை அடைந்தார்.
அடுத்த 4 பந்துகளில் ஜேக்ஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை அடிக்க அணியின் ஸ்கோர் சமன் ஆனது. வெற்றிக்கு1 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், இந்த ஓவரில் 1 பந்து மட்டுமே மீதமிருந்தது. ஜேக்ஸ் சிக்ஸர் அடித்தால், சதத்தை எட்டலாம் என்ற நிலை இருந்தது. ரஷித் கான் வீசிய கடைசிப் பந்தை ஜேக்ஸ் சிக்ஸருக்கு அனுப்ப ஆர்சிபி 16 ஓவர்கள் முடிவிலேயே 205 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜேக்ஸ் 41 பந்துகளில் சதத்தை எட்டினார். இவர் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்களை விளாசினார். கோலி ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். கோலி - ஜேக்ஸ் இணை 74 பந்துகளில் 166 ரன்களை எடுத்தார்கள்.