
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஐபிஎல் 2025 போட்டி மே 17 முதல் மீண்டும் தொடங்குகிறது. மே 9-ல் ஐபிஎல் போட்டி ஒரு வார காலத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்குவதன் மூலம், எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் முழுமையாகப் பங்கேற்பதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.
நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு, மத்திய ஒப்பந்த வீரர்கள் ஐபிஎல் போட்டியில் முழுமையாகப் பங்கேற்பார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதியளித்திருந்தது. இதன்படி, மே 25 ஐபிஎல் இறுதிச் சுற்று என்பதால், இங்கிலாந்து வீரர்களுக்கு அதுவரை தடையில்லா சான்றிதழைக் கொடுத்திருந்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதனால், மே 22-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராகத் தொடங்கவிருந்த டெஸ்ட் தொடரில் ஜேக்கப் பெத்தெல் சேர்க்கப்படாமல் இருந்தார்.
தற்போது ஐபிஎல் இறுதிச் சுற்று ஜூன் 3-ல் நடைபெறுவதால், இங்கிலாந்து வீரர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. காரணம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மே 29-ல் தொடங்குகிறது. இந்தத் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தெல், ஜாஸ் பட்லர், வில் ஜேக்ஸ், ஜேமி ஓவர்டன் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இதில் ஜேக்கப் பெத்தெல் ஆர்சிபியின் அடுத்த இரு ஆட்டங்களில் மட்டும் பங்கேற்பதாகத் தெரிகிறது. லக்னௌவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக பெத்தெல் மீண்டும் இங்கிலாந்து திரும்புகிறார்.
வில் ஜேக்ஸ் (மும்பை) மற்றும் ஜாஸ் பட்லர் (குஜராத்) திரும்புவது பற்றி உறுதியானத் தகவல்கள் எதுவும் இல்லை. சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததால், இரு ஆட்டங்கள் மட்டுமே மீதம் உள்ளன. எனவே, ஜேமி ஓவர்டன் திரும்ப மாட்டார் எனத் தெரிகிறது. ஆர்ச்சர் பற்றி தெரியவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் மே 21 முதல் மே 25 வரை அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ரொமாரியோ ஷெப்பெர்ட் (ஆர்சிபி), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (குஜராத்), ஷமர் ஜோசஃப் (லக்னௌ) இதில் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதால், அந்த வீரர்கள் பங்கேற்பதிலும் பிரச்னை எழுந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களில் ககிசோ ரபாடா (குஜராத்), லுங்கி என்கிடி (ஆர்சிபி), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தில்லி), எய்டன் மார்க்ரம் (லக்னௌ), ரயன் ரிக்கெல்டன் (மும்பை), கார்பின் பாஷ் (மும்பை), மார்கோ யான்சென் (பஞ்சாப்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ்) 8 பேர் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் மே 30-ல் இங்கிலாந்தில் கூட வேண்டும் என்பதால், மே 25-ல் இந்தியாவை விட்டு வெளியேறியாக வேண்டும். இதுவரை தான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பலாம் என்பதால், இவர்களுடைய தடையில்லா சான்றிதழ் ஜூன் 3 வரை நீட்டிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ இடையே இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பது மிக விரைவில் உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.