டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கத் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுக்காக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 75.33 சராசரியுடன், 205.45 ஸ்டிரைக் ரேட்டில் இரு அரை சதங்கள் உள்பட 226 ரன்கள் விளாசியுள்ளார். இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது குறித்த பேச்சுகள் அடிபடத் தொடங்கின.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு தினேஷ் கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடுவது (டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது) என்பது மிகப் பெரிய உணர்வு. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளேன். இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதைக் காட்டிலும் வாழ்க்கையில் வேறு எதுவும் பெரிதல்ல.
உலகக் கோப்பைக்கான சிறந்த இந்திய அணியைத் தேர்வு செய்ய மிகமிக உறுதியான, நேர்மையான மூன்று பேர் உள்ளார்கள். ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகார்கர் எடுக்கும் முடிவுக்கு முழு மனதுடன் ஆதரவாக இருப்பேன். அவர்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதற்கு மதிப்பளிப்பேன்.
அதேசமயம், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க, நான் 100% தயாராக உள்ளேன். இதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்றார் தினேஷ் கார்த்திக்.
டி20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
2022 ஐபிஎல் போட்டியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுருவுக்காக சிறப்பாக பேட் செய்த தினேஷ் கார்த்திக் 16 ஆட்டங்களில் 330 ரன்கள் விளாசினார். இதன்மூலம், அதே ஆண்டு இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்தார். 2022-ல் 28 சர்வதேச டி20யில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 20.50 சராசரியில் 141.38 ஸ்டிரைக் ரேட்டில் 287 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். டி20 உலகக் கோப்பையில் 3 இன்னிங்ஸில் 14 ரன்கள் எடுத்தார் தினேஷ் கார்த்திக்.