
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்ட பிரைடன் கார்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இவருக்குப் பதில் மாற்று வீரராக வியான் முல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸ் ரூ. 1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்குப் பயணம் செய்த இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ் இடம்பெற்றிருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களின்போது பிரைடன் கார்ஸுக்குக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் கார்ஸ் நீடித்தார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தின்போது, இந்தக் காயம் தீவிரமடைந்தது. இதனால், அந்த ஆட்டத்தில் 7 ஓவர்கள் மட்டுமே அவரால் பந்துவீச முடிந்தது. இதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலிருந்து பிரைடன் கார்ஸ் விலகினார்.
காயத்திலிருந்து குணமடைய நேரம் எடுக்கும் என்பதால், ஐபிஎல் போட்டியிலிருந்தும் பிரைடன் கார்ஸ் விலகியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிரைடன் கார்ஸுக்குப் பதில் மாற்று வீரராக தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் வியான் முல்டரைத் தேர்வு செய்துள்ளது. இவர் ரூ. 75 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வியான் முல்டர் 128 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2,172 ரன்கள் குவித்து 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் முல்டர் விளையாடுவது இதுவே முதல்முறை. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிக விக்கெட்டுகளை (6 விக்கெட்டுகள்) வீழ்த்தியவர்களில் ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார் வியான் முல்டர்.
ஐபிஎல் 2025 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை மார்ச் 23-ல் எதிர்கொள்கிறது.