இந்திய நாடே வினேஷ் போகாட்டின் தங்கப் பதக்கத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் எந்தவொரு பதக்கமும் கிடைக்க வழியில்லாமல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வினேஷ் போகாட், இன்று காலை கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்கமா, வெள்ளியா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் எந்தவொரு பதக்கமும் இல்லை என்பது இந்திய ரசிகர்களுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
விதிமுறைகளின்படி ஆரம்பக் கட்ட சுற்றுகள் மற்றும் இறுதிச் சுற்று நடைபெறும் காலை வேளைகளில் என இருமுறை எடையைக் கண்காணிப்பார்கள். செவ்வாய் காலையில் மேற்கொண்ட எடைப் பரிசோதனையில் சரியான எடையில் இருந்துள்ளார் வினேஷ் போகாட். ஆனால், காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்று எனத் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் விளையாடியதால் அதற்காக எடுத்துக்கொண்ட உணவுகளால் சற்று கூடுதல் எடையை அடைந்துள்ளார் வினேஷ் போகாட். இரவில் கூடுதலாக 2 கிலோ அதிகமாக இருந்ததால் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். எனினும் கடைசியில் ஏறத்தாழ 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக 50 கிலோ எடைப் பிரிவில் ஒரு தங்கம், இரு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
மல்யுத்த விதிப்படி, எடைப் பரிசோதனையின்போது வீரர்/வீராங்கனை அதில் பங்கெடுக்கவில்லை அல்லது அனுமதிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் கூடுதல் எடையில் இருந்தால், அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார். போட்டியின் தரவரிசையில் சம்பந்தப்பட்ட வீரருக்கு தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படாமல், கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவார்.
வினேஷ் போகாட், எதன் காரணமாகக் கூடுதலான எடையைப் பெற்றார் என்று அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவும் தனது ஃபேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
இந்தச் சோதனையான நிலைமையிலிருந்து வினேஷ் போகாட் விரைவில் மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்.